Monday, April 1, 2013

வேட்டை நாய்கள்

"டொக் டொக் "

இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது. இது கண்டிப்பாக கனவாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தாக வேண்டும் . 

"டொக் டொக் "

இந்த முறை பலமாக கதவு தட்டப்பட்டது. வாரி சுருட்டி கொண்டு எழுந்தேன். நான் இங்கே இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முனியன் காட்டி கொடுத்து இருப்பானோ ? ச்சே. இருக்காது முனியன் எட்டு தலைமுறைகளாக என் குடுமபத்துக்கு வேலை செய்பவன் . அவன் கல்யாணத்தை கூட நான் தான் நடத்தி வைத்தேன். 

"டொக் டொக் டொக் "

மலை உச்சியில் இருக்கும் ஒற்றை  வீடு இது. இங்க இருந்து தப்பிக்க மலையில் இருந்து குதிப்பதை தவிர வேறு வழியில்லை . இதை எப்படி கண்டுபிடித்து வந்தார்கள். டேனியல் துரை கலககாரர்களை நடத்தும் முறை மிக  கொடூரமானது. அதற்க்கு மலையில் இருந்தே குதித்து விடலாம். அழுகையை அடக்கி கொண்டேன். தப்பித்து ஆக வேண்டும். 

வெளியேற ஒரே வழி அந்த கதவுதான். கதவின் முன்னால் இந்நேரம் பீரங்கிகள் நிறுத்த பட்டிருக்கலாம். சிறு நேரம் சூழ்ந்த நிசப்தம் அவர்கள் திரும்பி சென்றிருக்கலாம் என்று ஆசுவாசுபட்ட நிம்மதியில்  கதவு உடைபடும் சப்தம் இடியென விழுந்தது 

முடிவு நெருங்கி விட்டது.. அறையில் இருந்த harddisk அனைத்தயும் ஜன்னல் வழி வெளி எறிந்தேன். இந்த வார நீயா நானா பார்க்க முடியாது என்ற எண்ணமே தொண்டையை அடைத்தது. கதவு உடைந்து விழுந்த அதே சமயம் iPhoneல் நான் எழுந்திருக்க வைத்திருந்த அலாரம் சாவுமணியென அடித்தது. நல்ல டைமிங் . கடைசியா சிரித்து கொண்டேன். 

கதவின் வழி மெல்லிய உறுமலுடன் உள்ளே நுழைந்த வேட்டை நாய்கள் கண்களில் மின்னிய சிறு குரூரத்தோடு முன்னேறின. இதற்க்கு என்னை சுட்டு கொன்று இருக்கலாம் . இரண்டாம் முறைஅலறியது iPhoneன் அலாரம். இந்த டைமிங் அவ்வளவாய் எனக்கு விருப்பமில்லை . கண்களை மூடி கொண்டேன்

முதுகின் மேல் பலமான் ஒரு உதை விழுந்தது. " ஆபீஸ் போக நினைப்பிருக்கா இல்லையாடா ?" என கேட்டபடியே கெளம்பி வெளியேறி கொண்டிருந்தான் ரூம் மேட் நண்பன். 

வேட்டை நாய்களிடம் இருந்து காப்பாற்றிய அவனை நன்றியோடு ஒரு பார்வை பார்த்தபின்னர் போர்வையை மீண்டும் மூடி படுத்தேன்.

1 comment: