Saturday, May 26, 2012

அல்டாப்பின் முதல் அனுபவம்

( தலைப்பை பார்த்து ஏடாகூடமாக எதையும் கற்பனை செய்யாமல் பதிவை படிக்கவும்...)


"ஏன்யா! இந்த ஊர்லே எல்லாரும் "..த்தா ..த்தா"ன்னு சொல்றானுகளே!!. .என்னத்தையா தர சொல்லி கேக்கறானுக?" . சென்னை வந்திறங்கிய முதல் கால்மணி நேரத்தில் அல்டாப்பு என்னை பார்த்து கேட்டது அது. அதன் அர்த்தத்தை சொல்லி அல்டாப்பின் வெள்ளை மனதையும் வெற்றுமூளையையும் களங்கபடுத்த ஆர்வமில்லாததால் " இந்த ஊர்லே யார் என்ன கேட்டாலும் கொடுத்துடாதே..முக்கியமா பணத்தை ".. என கூறி சென்னையை அறிமுகம் செய்தேன்.

சென்னைக்கு என்ன வேலை விசயமாய் வந்துள்ளீர் என யார் கேட்டாலும் " வேலை இருந்தா எதுக்குயா சென்னைக்கு வர்றோம் " என்பதே என் வழக்கமான பதில் 
ஆனால் இந்த தடவை சென்னையில் ஒரு சிறு வேலை நடக்க வேண்டி உள்ளது . அண்ணா சமாதியையும் நடிகர்களின் வீட்டையும்  பார்ப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் லட்சகணக்கான தமிழர்களில் அல்டாப்பும் ஒருத்தன் என்பதால் அவனையும் கூட்டி கொண்டு இந்த சென்னை பயணம்.

போன வாரம் சர்க்கரைவாசன் என்ற ஒரு தயாரிப்பாளர் போனில் கதை சொல்ல வருமாறு அழைத்திருந்தார். நான் படம் எடுக்க ஒரு கதையோடு அலைகிறேன் என கண்டுபிடிததற்க்கே அவருக்கு இந்த வருட சிறந்த கண்டுபுடிப்பிற்க்கான நோபல் பரிசை தாரளமாக வழங்கலாம். இம்முறையாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற சிறு நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் தருவதே சென்னை என் போன்றவர்க்கு அளிக்கும் வரம்..  அதே சமயம் சாபமும் கூட .

வழக்கம் போல சென்னை மதம் கொண்ட காட்டு மிருகத்தை போல திக்கெட்டிலும் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது . " எதுக்கய்யா எல்லாரும் இவ்ளோ அவசரமா எங்கயோ போயிட்டு இருக்காங்க ??" என்ற அல்டாப்பிடம் " அவங்களை நிறுத்தி கேட்டு பாரு. அவங்களுக்கே தெரியாது " என்றேன்.  அலுவலுகத்திற்கு எவ்வளவு அவசரமாய் செல்கிறார்களோ அதே அவசரத்தோடு வீட்டிற்கும் திரும்பும் விந்தையான மக்களை கொண்ட நகரம் சென்னை. காலை மனைவியிடம் தப்பிக்க  ஆபிசுக்கு ஓடி , மாலை மேனேஜரிடம் தப்பிக்க வீட்டுக்கு ஓடி...என்ன ஒரு இனிமையான நகர வாழ்க்கை 

சாலை ஓரம் கூவி கூவி லோன் விற்கும் இளைஞர்கள் , சிக்னலில் கார் கண்ணாடியை துடைக்கும் பிச்சைகாரகள் , அவர்களை கண்டு கொள்ளாமல் சிக்னலை மட்டுமே வெறித்து நோக்கி அமர்ந்திருக்கும் காரோட்டிகள் உள்பட வாழ்நாளில் தான் பார்த்தறியா கதாபாத்திரங்களை கண்டு வியந்தவாறே அல்டாப்பு உடன் வர , ஒரு வழியாய் தயாரிப்பாளர் இல்லம் வந்தடைந்தோம் .

"தரணிஆளும் பவர் ஸ்டார் சக்கரைவாசன் வாழ்க !!" , " அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி பவர் ஸ்டார் வாழ்க!" என்ற பேனர்கள் எங்களை  ஆர்ப்பாட்டாமாய்  வரவேற்றன .தமிழகத்தின் பிரபல நடிகரின் வீட்டை பார்த்த அடங்காத மகிழ்ச்சியில் அல்டாப்பும் ,தலைவிதியின் நிலைமையை நொந்தவாறு நானும் உள்நுழைந்தோம்.

வழுக்கைதலையை தடவியவாறு வந்த ஹீரோ கம் தயாரிப்பாளர் சக்கரைவாசனை கண்டு எனக்கு ஆச்சர்யம் எதுவுமில்லை .. தமிழ்நாட்டில் அரசியலிலும் சினமாவிலும் நுழைய பணத்தை தவிர வேறெந்த தகுதிகளும் தேவை இல்லைதானே ?.. வாயெல்லாம் பல்லை காட்டிக்கொண்டு கைகுலுக்கி அல்டாப்பு தன் பரவசத்தை வெளிபடுத்திகொண்டான். இதயத்தின் ஒரு பக்கம் ஓலமிட்டு அழ , மறுபக்கத்தை கல்லாக்கி கொண்டு பவர்ஸ்டார்க்கு கதையை சொல்லி முடித்தேன்.

"கதை ஓகே.. ஆனா வில்லேஜ் சப்ஜெக்டா இருக்கே. பவர்ஸ்டார்க்கு ஏத்த பவர்  இல்லையேப்பா ??" .. என்ற சக்கரைவாசனிடம் " இப்போ நம்ம ஊர்லே எல்லா வில்லேஜ்ஜுமே பவர் இல்லாமேதான் சார் இருக்கு ". என அப்பாவியாய் பதிலளித்தேன் . " எனக்கு ஏத்த மாதிரி நல்ல ஆக்சன் சுப்ஜக்டா ரெடி பண்ணிட்டு வா அடுத்த மாசம் " என்று பவர்ஸ்டார் எங்களிடம் விடைபெற்று கொண்டார். வெகு ஞாபகமாய் அல்டாப்பு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி பத்திரபடுத்தி கொண்டான்.

உதாசீனங்கள் பழகியவையே என்றாலும் தகுதி இல்லதாதவரிடமிருந்து வந்த புறக்கணிப்பு சற்று வலிக்கவே செய்தது .. தன் பிறவி பயன் பூர்த்தி அடைந்தது போல தனக்கு தானே சிரித்து கொண்டு முகம் முழுக்க பெருமையோடு ஆட்டோகிராப்பை அடிக்கடி பார்த்துகொண்டு குதூகலமாய் வந்த அல்டாப்பை பார்த்து 
என்னுள் தொக்கி நின்ற கேள்வி " இப்போ நான் அழுவதா ? சிரிப்பதா ? " ....

Saturday, May 19, 2012

அல்டாப்பும் ஆதீனமும்



அல்டாப்பு தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தான்.. ஒரு வித்தியாசாமான  அலறலோடு  .. பொள்ளாச்சியில் ஓட அவ்வளவு இடம் இல்லாத காரணத்தால் எப்படியும் திரும்பி இந்த தெருவுக்குள்தான் வந்தாக வேண்டும் .. காத்திருந்தேன் .  
பொள்ளாச்சியில் இது என் தொழிலுக்கு மந்தமான காலம். என் வேலை ஷூடிங்க்க்கு ஆள் பிடித்து கொடுப்பது.. லட்சியம் அப்படியே இயக்குனர் ஆகி விடுவது ..
நீங்கள் முகத்தை மறைக்காமாலே சிரித்து கொள்ளலாம் .. பழகி விட்டது ..

எதிர்பார்த்தபடி அல்டாப்பு வந்து சேர்ந்தான் .. "என்ன ஆச்சு ? ஏன் இப்படி போலிசை பாத்த எக்ஸ் மினிஸ்டர் மாதிரி ஓடிட்டு இருக்கே ? " என்றதுக்கு
" அப்புறும் சொல்றேன். பின்னாடி யாரவது வாராங்களான்னு பாரு ? ".. ஆதீனங்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்க்கு அல்டாப்பின் பின்னால் என்ன வேலை .. இருந்தும் பார்த்தேன். ஈ காக்கா இல்லை. சம்பந்தமே இல்லாத ஈயையும் காக்காவையும் ஒரே சொற்றொடரில் வைத்த தமிழரது புலமையை வியந்து கொண்டிருக்கும்போதே "  இங்க நிக்க கூடாது . வா போலாம் " என்றான் அல்டாப்பு 

உடன் நடந்தேன் ..  பெரும்பாலும்  அல்டாப்பிடம் நான் கேள்விகள் கேட்பதில்லை. நாலு வாரமாய் சாப்பிடதாவனிடம் ஏப்பத்தை எதிர்பார்ப்பதை விட கொடுமையான செயல் அல்டாப்பிடம்  அறிவை எதிர்ப்பார்ப்பது . திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்த அல்டாப்பு ஒதுக்குபுறமான இடம் வந்ததும் பயணத்தை நிறுத்தினான் .
சரத்குமார் பட பஞ்சாயத்து சீனில் நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல முகம் முழுக்க போலியான ஆர்வத்தை தேக்கி வைத்து அவனை பார்த்து கொண்டிருந்தேன். அல்டாப்பே பேச்சை துவக்கினான்.

'ஏன்யா.. இந்தா ஆதீனம்க்றது யாருயா ?"
"அவங்களா.. மடாதிபதிகப்பா "
" என்னது. மட சாம்பிரானியா ?"
"அவங்களை பாக்கா போறவங்க பேர்தான் மடசாம்பிராணி .  இவனுக அந்த மடத்துக்கு அதிபதி.. சாமியார் மாதிரி .. ஏன் கேக்குறே ?"
"ஓ. சாமியாரா .. அதுக்குதான் அடிக்க வராங்களா ..ஹ்ம்ம் .."

அல்டாப்பின் முகம் வியர்க்க துவங்கி இருந்தது .. 

"நான் வேற நம்ம ஊருக்கு வந்த ஆதீனதிகிட்ட போன சிடி பிரிண்டு சரி இல்லை. அடுத்த படம் எப்போன்னு கேட்டு தொலைச்சுட்டேன். அதன் தொரத்துறாங்க. இப்போ என்னையா பண்றது ?"

ஆதீனங்களை மிக சரியாக புரிந்து கொண்டுள்ள அல்டாப்பு சட்டென்று ஒரு கணத்தில் எனக்கு அறிவாளி போல தோன்றினான். சை . மாயை. அப்படி இருக்க வாய்ப்பில்லை . இந்த உலகம் எத்தகைய முட்டாள்களை கொண்டிருந்தால் அல்டாப்பையே அது அறிவாளியாய் காண்பிக்கும் . அது சரி . ஆதீனங்கள் கடவுளாய் இருக்கும் உலகில் அல்டாப்பு  என்ன தூசு ..

அதற்குள் அல்டாப்பை தேடி அலைந்த கூட்டம் எங்களை நெருங்கி விட்டுருந்தது .. ஆதீனத்தையும் சேர்த்து ..

"யோவ்..நீ கேட்ட அந்த வீடியோ கேமரா வாங்கி தர்றேன். ஏதாவது பண்ணி காப்பத்துயா" என அவன் சொன்னவுடன் டக்கென அந்த யோசனை உதித்தது .. அல்டாப்பின் காதில் கிசுகிசுத்தேன். அல்டாப்பு அதை கூட்டத்தை பார்த்து கம்பீரமாய் சொன்னவுடன் கூட்டம் சிதறி ஓடியது .. ஆதீனம் உள்பட 

" என் கனவுலே சிவன் தான்யா வந்து அதை கேக்க சொன்னாரு. எதை பேசறதா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கோங்க "

தப்பித்த சந்தோஷத்தில் குதூகலித்த அல்டாப்பு " யாருயா அந்த சிவன் ? செம ஆளா இருக்காப்ல " என்றான்

சிவன் யாரென தெரிந்தால்தான் ஆதீனங்களின் பொழப்பு சிரித்து விடுமே என் எண்ணியபடி " எல்லாம் தெரிஞ்சவர்தான் " என் சொல்லி வைத்தேன்  

..... தொடரும் 






Tuesday, May 15, 2012

அல்டாப்பு என்ற ஒரு அரசியல்வாதி


அல்டாப்பு என்ற ஒரு அரசியல்வாதி 

அலாரம் வைக்கும் வசதி இல்லாததால் என்னை எழுப்பும் வேலையை சூரியனிடமே கொடுத்து இருந்தேன் . ஆனா இன்னைக்கு லேட்டு . 
பதற்றத்துடன் எழுந்து கெளம்ப ஆரம்பித்தேன் .. முன்கதை சுருக்கம் சொல்லி என்னை அறிமுக படுத்தி கொள்ள ஆசைதான் .. ஆனாலும் தாமதம் என்பது அல்டாப்பிற்கு அறவே புடிக்காத ஒன்று.  என் மூன்று வேலை சாப்பாடுமே அல்டாப்பிடம் ஓசியில் கிடைப்பது என்பதால் அவசர அவசரமாய் கெளம்பி கொண்டிருக்கிறேன் 

கடந்த முறை 5 நிமிட தாமதமானாதால் என் வடையை எடுத்து வைத்து கொண்டு " இன்னொரு தடவை லேட்டு ஆச்சுனா இட்லியும் சாப்பிட்டுருவேன்" என கொடூரமாக முறைத்த அல்டாப்பின் முகம் நிழலாடியதால் நடையின் வேகத்தை கூட்டி மெஸ்ஸை வந்தடைந்தேன் .. மெஸ் நாயர் வழக்கம்போல கேவலமாக பார்த்து பார்வையை திருப்பினார் .. என் சொரணையை சோறு வென்று வருடங்கள் ஆனதால் சாதரணமாய் கடந்து அல்டாப்பின் டேபிளில் வந்தமர்ந்தேன் 

"அப்புறம் .. சட்டை பட்டையை கெளப்புது .. புதுசா அல்டாப்பு ?" ... என்ற என் வழக்கமான பாராட்டை காதில் வாங்காமல் யோசித்து கொண்டிருந்த அல்டாப்பை பார்த்து பகீரென்றது ..வழக்கமாய் இப்படி சம்பந்தம் இல்லமால் புகழ்ந்தாலே கடைசி சொத்தை பல் வரை காட்டும் அல்டாப்பின் புது போக்கு பயத்தை அளித்தது. அதை வைத்துதான் நான் பிழைப்பையே ஓட்டுவது .. 
" என்ன ஆச்சுப்பா " ? என்றதுக்கு அல்டாப்பின் பதில் என் பயத்தை நமீதா அளவு பிரமாண்டமாகியது .." நான் அரசியல்வாதி ஆகிடலாம்னு இருக்கேன் என்ன சொல்றே?" என்றான் அல்டாப்பு 

இதுவரை அல்டாப்பு வாழ்க்கை , கொள்கை , எதிர்காலம் குறித்து  இவ்வளவு தூரம் யோசித்ததே இல்லை. அதிகபட்சம் அவன் யோசிப்பது டிபன் சாப்பிடும்போது லஞ்ச் என்ன சாப்பிடலாம் என்பதை தாண்டி இருக்காது. உடனே இதை சரி செய்ய விட்டால் என் பொழப்பு சிரித்து விடும் என்பதால் உடனடி நிவாரண வேளைகளில்  இறங்கினேன் 

"என்னாப்பா திடீருன்னு ??"" ... 

" ஆமாயா.. அந்த சைடு போய்டலாம்னு இருக்கேன். எங்க அப்பன் வர வர சரியா காசு தர்றதில்லை .. ஏழு கழுதை வாயசிகிடுச்சு . சும்மாவே இருக்கேன்னு திட்டுறான். ஏழு கழுதைக்கு என்னையா வயசு இருக்கும் ?? "

" எல்லா கழுதைக்கும் ஒரே வயசுதான் அல்டாப்பு . அப்பா சொல்றதுக்கெல்லாம சங்கடபடுவே .. சரி விடு.. டிபன் சொல்லிட்டியா ?? " என்ற என்னை முறைத்த அல்டாப்பு 
" இப்போ யோசனை சொல்ல போறியா இல்லையா ? " என்றான் . 
பசி வயிற்றை கிள்ளியது .. யோசனை சொல்லாமல் இன்று அவனும் வாங்கி தருவது போல் இல்லை ." அரசியல்னா ஒரு சாக்கடைபா ?" என்ற வழக்கமான அரசியல் இலக்கணம் சொல்லி வைத்தேன் 

"இப்படியே எல்லாரும் சொன்னா யார்தான் சுத்தம் பண்ணுவாங்க. காந்தி தாத்தா என்ன சொல்லி இருக்காரு தெரியுமா ?"
என்னோட தாத்தா நான் உருப்படவே மாட்டேன் என்று சொன்னது மட்டும்   ஞாபகத்தில் வந்து சென்றது .. 

"அது எல்லாம் சரிப்பா ..இப்போ திடீர்னு எந்த கட்சின்னு போய் சேருவே ?? அவங்க உன்னை சேத்திக்கனுமில்ல " 
" ஏன் சேத்திக்க மாட்டாங்களா ? எனக்கு என்னைய குறைச்சல் " ? என்றவனிடம் " அறிவு " என சொல்ல வாய் வரை வந்து அடக்கினேன் ..
இது சரி பட்டு வராது .. அல்டாப்பு படாமல் திருந்த போவதில்லை .

" அல்டாப்பு . அதுக்கு ஒன்னு ரவுடியா இருக்கணும் .. நீ இது வரைக்கும் கொசுவையும் குவர்டரையும் தவிர யாரையாவது அடிச்சு இருக்கியா ?" 

"இல்லை .. ஆனா யாரவது அடிக்க வந்த நிக்காமே ஓடுவனே .. அது போதாதா ?" 
"சரி. அதை விடு .. அதுக்கு ரொம்ப பொறுமை வேணுமே. யாரவது உன்னை கேவலமா பேசினா சிரிச்சுட்டே நிக்கணும் .. முடியுமா உன்னாலே ?"

"ஏன் முடியாது " என்று மாட்டினான் அல்டாப்பு.. கிடைத்த நல்ல வாய்ப்பை விடுவனா நான். 

" சரி .. உனக்கு ஒரு டெஸ்டு..இப்போ சாப்பிடுவோம். சாபிட்டுட்டு நாயர்கிட்ட போய் காசு தர முடியாதுன்னு சொல்லு.. அவன் திட்டரதை நீ சிரிச்சுட்டே வாங்கிட்ட நீ அரசியல்வாதி ஆகிடலாம்"
சரியென முடிவு செய்து அன்று அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு "பரிசோதனை"க்கு தயாரானான் அல்டாப்பு ..

"பில்லு 300 ரூபா " என்ற நாயரிடம் " காசு எல்லாம் தர முடியாது .என்னயா பண்ணுவே . திட்டினா திட்டிக்கயா " என்ற அல்டாப்பு என்னிடம் திரும்பி கண்ணடிக்க நானும் வெற்றி குறி காட்டி வைத்தேன் 

முதல் தலைமுறை அடுத்த தலைமுறை என நாறடித்த போது பொறுத்த அல்டாப்பின் முகம் மூன்றாம் தலைமுறையை அடைந்த போதே கோணலாகியிருன்தது.. நான்காம் தலைமுறையில் விசும்பலுடன் ஐந்தாம் தலைமுறையில் அழுகையாய் வெடித்தது .. நாயரின் அடுத்த இலக்கு உடன் சாப்பிட்ட நான்தான் என்பதால் அவசரமாக சென்று பரிசோதனையை  விளக்கி பைசல் செய்தேன் ..

பணத்தை கட்டி விட்டு என்னை பாவமாய் பார்த்த அல்டாப்பு " நமக்கு அரசியல் சரிபட்டு வரதுயா " என்று விரக்தியுடன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை கசக்கி எரிந்து விட்டு கெளம்பினான்.
அதில் இருந்த ஏதோ ஒன்று தான் அல்டாப்பை பாதித்து இருக்க வேண்டும் .. எடுத்து படித்து பார்த்தேன் .. அதன் பாதிப்பு நியாயமென்றே விளங்கியது 

"செய்தி : ஒன்றும் இல்லாமல் அரசியலுக்குள் போனா ராசா ஒன்னரை லட்சம் கோடியுடன் ஜெயிலில் இருந்து திரும்பினார் "

டிஸ்கி : டிஸ்கியின் அர்த்தம் கூட தெரியாத அளவு நான் புது பதிவர் என்பதால் கொஞ்சம் மெதுவா திட்டுங்க .. ப்ளீஸ்