Tuesday, January 20, 2015

அப்புச்சி சாமீ கதைகள்

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முழுக்க முழுக்க கற்பனையே.. இப்படியே ஆரம்பிக்கும் கதைகள் ஆரம்பிக்கும் முன்பே சலிப்பு தட்டிவிடுகிறது. முழுக்க கற்பனையான, யாரையும் புண்படுத்தாத கதையில் அப்படி என்ன சுவாரசியம் இருந்துவிட கூடும். 

அப்புச்சி சொல்லும் எந்த கதையிலும் இந்த முட்டாள்தனமான க்ளிஷேக்கள் இருக்காது. முழுக்க கற்பனையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் கதைகளால் புண்படாத ஆட்களே ஊரில் இல்லை என்பது மட்டும் தெளிவு.சுவாரசியத்திற்கும் குறைவு இருந்ததேயில்லை. 

"செல்லத்தாயி வீட்டு திண்ணையிலேதேன்டா படுத்து கிடப்பேன். அவ வீட்டுல இருந்து பத்து வருஷத்துல வந்த ஒரே சத்தம் அவ டெய்லரோட ஓடிப்போன அன்னைக்கு அவ புருஷன் ஒப்பாரி வச்சு அழுத சத்தந்தேன்.அப்புறம் ஓடிப்போகாம என்ன பண்ணுவா? "

அப்புச்சியின் கதைகளுக்கு எந்த சென்சார் போர்டும் கிடையாது.

ஊரில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் அவர் அப்புச்சிதான்.அப்புச்சிக்கு குழந்தை குட்டிகளென யாரும் கிடையாது. அவர் சேர்த்து வைத்த ஒரே சொத்து இந்த கதைகளும், அதை சொல்லும் சுதந்திரமும்தான். அந்த காலத்தில், ஊரிலேயே எழுத படிக்க தெரிந்த ஒரே ஆள் அப்புச்சிதான். அதிகமாய் படித்து படித்தே அவர் பைத்தியமாகி விட்டதாகத்தான் கேள்வி. அதனால் படித்தால் பைத்தியமாகிவிடுவோம் என்பது ஊர்மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. 

"இந்தா போறான் பாரு பழனிசாமி. கைல நாலணா இருந்தா கோழிக்கு முன்னே வெள்ளனே எந்த்ரிச்சு இவன் கூவுவான். கையில எட்டணா இருந்தா ஊர்கிணத்துல ஓடிப்போய் ஒன்னுக்கடிச்சு வச்சுருவான்.அதான் கருப்புசாமி இவனை பிச்சைக்காரனாவே வச்சுருக்கு" என பழனிசாமி கடந்து செல்லும்போதே சத்தமாக சொல்லும் உரிமையை அப்புச்சிக்கு தோல்சுருக்கங்கள் அடர்ந்த முதுமையும், பைத்தியகார பட்டமும் வாங்கி தந்திருந்தன.
அப்புச்சி கதைகளில் இதுவரை நாயகர்கள் ஆகாத ஊர் ஆம்பளைகளை ஒரு கையால் எண்ணி விடலாம்.அவர்கள் அனைவருக்கும் வயது ஐந்திற்கு கீழேதான் இருக்கும்.  அவர்கள் பிறந்த கதைகளை ஏற்கனவே அப்புச்சி விலாவாரியாக சொல்லியிருந்தது வேறு விஷயம். 

கதையின் திடீர் திடுக் திருப்பமாக ஒரு பௌணர்மி நாள் முதல், அப்புச்சி பேசுவதை நிறுத்தி விட்டார். பாரதிராஜா படங்களில் திடீரென கடல் அலைகள் நின்று போவதை போல, தென்னைமரங்கள் திடீரென அசைவை நிறுத்தியதை போல, ஊரே திடீரென மயான அமைதியில் ஆழ்ந்தது.

இரு தினங்கள் அப்புச்சி பேசுவதில்லை என்பதை உறுதி செய்தபின்,சிறப்பு அர்ச்சனைக்காக ஊர் பெண்கள் கோவிலுக்கும், பட்டாசும் சாராயமும் வாங்குவதற்காக வெளியூருக்கு ஆண்களும் உற்சாகத்துடன் கெளம்பி சென்றனர்.இது உண்மைதானா என தன்னைத்தானே கிள்ளியும், வாய்ப்பிருந்தவர்கள் சில இடுப்பையும் கிள்ளி பார்த்து கொண்டனர். அப்புச்சி அமைதியாகி விட்டதால் யார் இடுப்பையும் யாரும் கிள்ள அங்கு கட்டற்ற சுதந்திரம் கரைபுரண்டு ஓடியது.

பிரசிடெண்ட் சபாபதிதான் மலையாள மாந்த்ரீகர் துணையுடன் அப்புச்சி வாயை கட்டிவிட்டார் என பரவலாக ஒரு பேச்சு இருந்தது. அது பொய் என்றும் அந்த மலையாள மாந்த்ரீகர் எல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்றும், அவர் பணம் பிடுங்கும் ஏமாற்றுகாரர்தான், மூன்று தடவை முயற்சி செய்தும் அவரால் தன் பொண்டாட்டி வாயை கட்ட முடியவில்லை என சுப்பண்ணா  கண்ணீர் மல்க தெரிவித்த நாள்தான், அது அடுத்த எலெக்‌ஷனுக்காக சபாபதியே கட்டி விட்ட கட்டுக்கதை என தெரிந்தது.

அரசமரத்தடியில் கண்ணில் நிறைந்து வழிந்த அமைதியோடு எதுவும் பேசாமல், நகராமல் அமர்ந்திருந்த அப்புச்சியை மோகினிபிசாசு அடித்து விட்டது, அப்புச்சிக்கு அருள் கிடைத்துவிட்டது என பல கதைகள் சடுதியில் முளைத்தன.  பேய்க்கு பயந்த ஊர் என்பதாலும், பேய்க்கு பயந்தால் இரவுநேரத்தில் எதுவும் செய்ய முடியாது என்ற ஆழ்ந்த சிந்தனையாலும், சாமி அருள் கிடைத்த கதையே ஏகமனதாய் தேர்வு செய்யப்பட்டது.

அப்புச்சி ஏதாவது பேசிவிடுவாரா என்ற பயத்தில் கடந்து சென்ற மக்கள், இப்போது  பயபக்தியுடன் கடந்து சென்றார். அப்புச்சியின் முன்பு திடீரென விபூதி நிரம்பிய அலுமினிய தட்டு முளைத்தது. கருப்புசாமி அப்புச்சிக்குள் இறங்கிவிட்டதாக, மனதில் துணிவுடன் அப்புச்சியை நெருங்கி சென்ற பூசாரி உறுதி செய்தார்."கருப்புசாமீ!! என் தெய்வமே. ஊரை காப்பாத்த வந்து இறங்கிட்டியா சாமீ.." என ஆக்ரோஷமாய் அப்புச்சியை பார்த்து உடுக்கையை வாசிக்க, ஊர் ஆவேசமாய் கன்னத்தில் போட்டுக்கொண்டது. 

"சாமீ.சாமீ. என்னை மன்னிச்சுரு சாமீ.கேரளா பூசாரிகிட்ட போனது தப்புதான்.குப்பத்தா வீட்டுக்கு ராத்திரி போனதும் தப்புதேன்.என் குலத்தை அழிச்சிராதே சாமீ.." என அப்புச்சி முன்பு உருண்டு உருண்டு அழுத பிரசிடெண்ட் சபாபதியை  ஊரே வியப்பாகவும், குப்பத்தா புருஷன் வெறியோடவும் பார்த்த அந்த நாள் முதல் அப்புச்சி அந்த ஊரின் அதிகாரப்பூர்வ காவல் தெய்வமானார். 

அப்புச்சி சாமி முன்வந்து செய்த பாவங்களை சொல்லி உருண்டால் மூன்றே நிமிடங்களில் பாவ விமோச்சனம் என்றும், அடுத்த ஏழு நாட்களில் அதிர்ஷடம் வீட்டுக்கதவை அல்லது பின்கதவை கண்டிப்பாக தட்டும் என்ற கதை காட்டுத்தீ போல் பரவியது. இந்த கூத்துக்களை எல்லாம் ஆமோதிப்பது போலவே அப்புச்சி சாமியின் தலை லேசாக, சீராக ஆடிக்கொண்டிருந்தே இருந்தது. 

அப்புச்சி சாமீ கை காட்டும் திசையில் கோவில் கட்ட வேண்டும் இல்லையேல் இனி ஏழு வருடங்களுக்கு மழை வராது என்பதை அந்த ஊர் வானிலை நிபுணர் முந்தைய கருப்புசாமி கோவில் பூசாரி, இன்றைய அப்புச்சி சாமி பூசாரி ஆராய்ந்து அறிவித்தார். அப்புச்சியிடம் பாவ விமோச்சனம் பெற கூடிய கூட்டம் நாளுக்கு நாள் கூடி கொண்டே போனதால் கோவில் கட்ட பணம் மழைக்கால வெள்ளமென சேர்ந்தது. 

கருப்புசாமி இறங்கியதால் எந்நேரமும் ஆடியபடி இருந்த தலையுடனும், கோவில் கட்டும் திசையை குறித்தபடி ஒரு தினுசாக வளைந்திருந்த இடது கையுடனும், ஏதோ புரியாத மந்திரங்களை முனகியபடி கோணியிருந்த வாயுடனும் கம்பீரமாய் அரசமரத்தடியில் வீற்றிருந்த அப்புச்சி சாமி ஒரு அமாவாசை நாளன்று மலையேறினார். 

அவரை புதைத்த இடத்தில் முளைத்த கோவில் " கோணவாய் அப்புச்சி சாமீ துணை" என்ற பெரிய எழுத்துகளின் கீழே "உபயம் ப்ரசிடெண்ட் சபாபதி " என்ற சிறிய எழுத்துகள் பொறித்த பெயர் பலகையுடன் பிரசித்தி பெற்றது. அப்புச்சி சாமீ மலையேறிய நாள் வருடா வருடம் திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. அடுத்த எலெக்‌ஷனில் சபாபதியே ப்ரசிடெண்ட் ஆனார். குப்பத்தா வார்டு மெம்பர் ஆனார். தினமும் பல கதைகளை சம்பந்தபட்டவர்களே முன்வந்து சன்னதியில் சொல்லுமாறு செய்துவிட்டு மறைந்தது, அப்புச்சிசாமீ அந்த ஊருக்கு கொடையளித்த வரம். ஆனால் அவற்றில் ஒன்று கூட அப்புச்சி சொன்ன கதைகள் அளவு சுவாரசியமாய் இருந்ததில்லை.இருக்க போவதும் இல்லை.


Sunday, March 9, 2014

மாசாணி

சற்று அடர்த்தியாய் வளர்ந்திருந்த அரும்பு மீசையை  தடவி பார்த்து விட்டு லேசாக கர்வம் துளிர்த்த புன்னகையோடு தலையை வாரிக்கொண்டிருந்தேன்.நீங்கள் ஊகித்தது சரியே.நான் வயதுக்கு வந்து சில மாதங்கள் ஆகி விட்டிருந்தது.சுகந்தி டீச்சர் மீதிருந்த காதல் இப்போது உடன்படிக்கும் செல்வி மீது தாவியிருந்தது.கடைக்கு போய் வர சொல்லும் அம்மா மேல் கோபம் வர ஆரம்பித்திருந்தது.சினிமாவில் சண்டைகாட்சி பாரத்தால் நரம்புகள் முறுக்கேறவும், காதல் காட்சி பார்த்தால் வெட்கம் வரவும் துவங்கியிருந்தது.சாலையை கடக்கும்போது அப்பா கையை பிடித்தால் உதறிவிட்டு முறைக்கும் வயதிற்கு வந்து சிலமாதங்கள் ஆகியுள்ளது

"அம்மா!செந்திலான் வீட்டுக்கு போய்ட்டு  வர்றேன்" இப்போதெல்லாம் நான் அனுமதிக்காக காத்திருப்பதில்லை.வெறும் அறிவிப்பு மட்டும்தான்."டேய். ஆழியார் டேம் தொறந்துவிட்டுருக்கானுக.தண்ணி அதிகமா வரும்.பெரிய வாய்க்கால் பக்கம்கிக்கம் போனா அடி தொலைச்சு போடுவேன்" இரைந்துகொண்டிருந்த அம்மாவின் குரலை காதில் வாங்கும் நிலமையில் நான் இல்லை.செந்திலான் , மணியன் , குண்டாக இருப்பதால் நாங்கள் மாசாணி என செல்லமாக அழைக்கும் திலீபன் ஏற்கனவே திட்டமிட்டபடி ஊருக்கு வெளியே விநாயகர் கோவிலில் காத்திருந்தார்கள்.

இது ஒன்றும் எங்கள் முதல் ஹீரோயிச முயற்சி அல்ல . ஏற்கனவே ஓடும் பஸ்ஸில் ஏறுவது , ஹேண்டில்பார்லிருந்து கையை எடுத்தபடி சைக்கிள் ஓட்டுவது , மணியகாரர் தோப்பில் மரமேறி மாங்காய் திருடுவது என சிலபல ஹீரோயிசங்கள் ஏற்கனவே பழக்கம்தான் மாசணியை தவிர்த்து . மாசாணி இன்னும் சைக்கிள் ஓட்ட கூட கற்றுகொள்ளவில்லை. பாவம் அவன் பயந்த சுபாவம்.

இன்றுகூட வாழதோட்டத்தம்மன் கோவில் போவது மாசாணிக்கு தெரியாது.செந்தில் தோப்புக்கு போகிறோம் என நம்பிதான் உடன் வந்து கொண்டிருந்தான்.முன்னமே சொல்லியிருந்தால் மாசாணி வந்திருக்க போவதில்லை.

காரணம் , பெரியவர்கள் கூட  அந்த வாழதோட்டத்தம்மன் கோவிலுக்குள் நுழைவது இல்லை.அந்த கோவிலை பற்றி சிறுவயதிலிருந்து கேட்டிருந்த அமானுஷ்ய கதைகள் அப்படி.அந்த பாழடைந்த கோவில் வழியே பகலில் கூட தனியே யாரும் கடப்பதில்லை.

"அந்த கோவில் அம்மன் ரொம்ப ரொம்ப சக்திடா.அந்த காலத்துல வருஷத்துக்கு ஒரு தடவை மைசூர் மஹாராஜா குதிரை ,யானை எல்லாம் கட்டிட்டு வந்து பூஜை எடுப்பாராம்.ஏகப்பட்ட நகை அம்மனுக்கு  சாத்தி மஹாரஜா கும்பிடுவாங்களாம்." மணியன் சொன்ன கோவிலின் வரலாறு

செந்திலான் தோப்பை தாண்டித்தான் கோவில் என்பதால் எதிரே சந்தேக்கண்களை சுமந்தபடி வந்தவர்களிடம் "தோப்புக்கு போறோம் மாமா/சித்தப்பா/பெரியப்பா" என  சமாளித்துவிட்டதால் கோவிலை அடைய பெரிய தடைகள் ஏதுமில்லை.கோவிலுக்குள் நுழையும்போதே ஏனோ முதுகுதண்டில் ஜிலீரென்றது.எதிர்பாராத இந்த திடீர் கோவில் விஜயத்தால், மாசாணி கிட்டதட்ட அழுகையின் விளிம்பில் இருந்தான்.கோவிலின் வாயிலில் பாதி புதரில் மறைந்து மீதி வெளியில் நீட்டியபடி இருந்த துருப்பிடித்த சூலம் அமானுஷ்யத்தை சற்று அதிகப்படுத்தி காண்பித்தது.

பாதி எரிந்த ஊதுபத்தியும், சூடமும் பாழடைந்த தேர்மாடம் முன்பு கிடந்ததை கவனித்துவிட்ட மாசாணி வீறிட்டான்.

"ஏன்டா மணியா.யாருமே வர மாட்டாங்கனு சொன்னே.இங்கே யாரோ பூஜை பண்ணியிருக்காங்க.திரும்பி போய்டலாம்டா" மாசாணியின் திகில் உறைந்த குரலை கோவில் மண்டப மணி காற்றில் ஆடி சப்தமாய் ஆமோதித்தது.

"வேட்டையனூர் பெரிய கவுண்டருக்கு இது குலதெய்வம்டா.எப்பவாது  ஒருக்கா பூஜைக்கு வருவாங்க.ஆனா இது வரைக்கும்தான்.அந்த கிணத்துபக்கம் போக மாட்டாங்க.பூஜைக்கு தண்ணி வேணும்னா கூட பக்கத்து காட்டிலிருந்துதான்." மணியன் விளக்கினான்

ஏற்கனவே அரசல்புரசலாக ஏன் என தெரிந்திருந்தும் நடுங்கிய குரலில் மாசாணி "ஏன்?" என்றான்.

மணி சற்று குரலை தாழ்த்தி கொண்டு தொடர்ந்தான்."ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி திருவிழா முடிஞ்சு நகையோட இருந்த சாமியை ரெண்டு திருடனுக திருட வந்தானுக.நகையை எடுத்துட்டு சாமியை இந்த கிணத்துக்குள்ள போட்டுட்டானுக.சாமிக்கு கோவம் வந்து அவனுகளை அப்படியே கிணத்துல இழுத்துடுச்சு.அடுத்த நாள் அவங்க பொணம்தான் மெதந்துச்சு கிணத்துல"

"அப்புறம்?'"

கதையை செந்தில் தொடர்ந்தான் "எங்க காட்டுல நைட்டு வேலை செய்யறவங்க நிறைய பேரு அந்த திருடனுகளோட ஆவியை பாத்திருக்காங்க.நைட்டு உலாத்துமாம்.அப்பறம் அம்மன்சாமியும் கிணத்துக்குள்ள இன்னும் கோபமா இருக்கு.யாரு கிட்ட போனாலும் கிணத்துக்குள்ளார இழுத்துரும்."

மாசாணி இப்போது எங்களை பார்த்த பார்வையில் பயமும் வெறுப்பும் சரிபாதி கலந்திருந்தது.அதை அலட்சியபடுத்தியபடி செந்திலிடம் "சும்மா கிணத்துகிட்ட போய் பாப்பமா?!" என்றபடி கண்ணடித்தேன்.

"டேய் வேணாம்டா!!" என மாசாணி அலறியதை பொருட்படுத்தாது கிணற்றின் விளிம்பை சென்றடைந்தோம். கிணத்தை சற்று எட்டி பார்த்த அடுத்த நொடி , மணியன் "அய்யோ..சாமி இழுக்குது.இழுக்குதுடா "என அலறிகொண்டே கைகாலை வேகமாய் உதறியபடி கீழே விழுந்தான்.நாங்கள் எதிர்பார்த்தபடியே தூரத்தில் நின்றிருந்த மாசாணி பின்னங்கால் பிடரியை தாண்டி நெற்றியில் படும்படி ஓட ஆரம்பித்திருந்தான்.

எங்கள் திட்டம் பெருவெற்றி."மாசாணி!நில்றா.சும்மா விளையாட்டுக்குடா.." எங்கள் குரல் கேட்கும் தொலைவில் மாசாணி இல்லை.வயிற்றை பிடித்தபடி அதே இடத்தில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கும போதுதான் எங்களுக்கு அது உறைத்தது .சட்டென உறைந்துபோய் அமைதியானோம். ஆளில்லா அந்த அத்துவானகாட்டில் இரண்டு ஆண்களின் மெல்லிய அழுகை  சப்தம் மட்டும் அந்த கிணற்றின் சுவற்றில் மோதி எதிரொலித்துகொண்டிருந்தது.

Friday, June 21, 2013

ஹாப்பி பர்த்டே விஜய் !!!

"குட்டி.ஐ  லவ் யூ " தமிழ் சினிமா கலெக்டர் யூனிபார்ம் ஆன முக்கால்கை ரவிக்கையோடு சிம்ரன் வீறிடும் துள்ளாத மனமும் துள்ளும் க்ளைமாக்ஸ் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது . காரணம் அன்றே நானும் என் பத்தாம் வகுப்பு  ஊர் தோழர்கள் சிலரும் வயசுக்கு வந்த நாள். அதாவது ஊரிலிருந்து பொள்ளாச்சி டவுனுக்கு தனியாக வந்து படம்பார்க்க தகுதியான வயசுக்கு வந்த நாள்.

யார் என்ன ஊர் என கேட்டாலும் வீறாப்பாக பொள்ளாச்சி என சொல்லிவிட்டாலும் ஊர் என்னவோ பொள்ளாச்சியில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் இருந்த சின்ன கிராமம்தான் . பக்கத்துக்கு ஊரில் இருந்த தியேட்டர் என பெயர் மட்டும் மாற்றப்பட்ட டெண்டுகொட்டகை  வரையுமே அதுவரை  தனியாக சென்று வர அனுமதி இருந்தது.டென்த் கடைசி எக்ஸாம் என்பதால் நண்பர்களோடு சென்று வர  இந்த சிறப்பு அனுமதி

சில நண்பர்களை பிரியும் சோகம்  , திடீரென கிடைத்த சுதந்திரமும் , பதினைந்து ரூபாயும் தந்த பரவசம்  என அந்த நாளை ஞாபகம் வைக்க ஏற்கனவே தேவையான அளவு காரணங்கள் இருந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படமே  அவை அனைத்தையும் கோர்ப்பதாக இன்று வரை உள்ளது. விஜய் நெருக்கமானதும் அப்படியே

சற்றே வளர்ந்து டபுள் மீனிங் புரிய ஆரம்பித்த வயதில் வந்த குஷி விஜயை இன்னும் நெருக்கமாக்கியது. "மூச்சை எல்லாரும்தான் விடறாங்க" என்ற விஜயின் டயலாக்குக்கு அர்த்தம் முழுதாய் புரியா விட்டாலும் கன்னாபின்னா  என வெட்கப்பட்டு வைத்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

அதன் பிறகு பள்ளி நண்பர்களை போலவே விஜயும் சில பல மொக்கை படங்கள் கொடுத்து விலகி போனார். கல்லூரியில் சரக்கடிக்க ஆரம்பித்த புதிதில் பாதி பீரில் முழு போதை ஏறி போய் பார்த்த படம் கில்லி. "மச்சி .செம படம். விஜய் கெத்துடா . பர்ஸ்ட் ஹாப் என்னா ஸ்பீடு! மப்பே இறங்கி போச்சுடா. ரூம்ல சரக்கு இருக்கா ?" என திரும்பவும்   உடனடி விஜய் பேன் ஆன இரவு அது.

மீண்டும் விழுந்து போனார் விஜய். விஜய் யானை வர்க்கம் போல. பிரபுக்கு இணையாக  நகைகடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. அப்பாவின் கையை உதறி மீண்டும் எழ சில வருடங்கள் ஆகி போனது. கண்டிப்பாக எழுந்து விட்டார் என்றே நினைக்கிறேன்

சமீபத்தில் குடும்பஸ்தனாக துப்பாக்கி பார்த்த போது , அதே பத்தாம் வகுப்பு சிறுவனாக கை தட்டி ரசிக்க வைத்தது விஜயின் மிக பெரிய பலம். என் பள்ளிக்கால புகைப்படத்தை எனக்கே அடையாளம் தெரியாத பொழுதில் , நான் சிறு வயதில் ரசித்த அதே  உருவத்தில் அதே துடிப்புடன் அதே விஜயாக இருக்கும் அசாத்திய உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் வேறு எந்த நடிகரிடமும் இதை காண முடிவதில்லை

எத்தனையோ விமர்சனங்களை வைத்தாலும் , "விஜய் பாத்து போதுப்பா" என தமிழ்நாட்டின் அனேக குழந்தைகளை ஈர்க்கும் சக்தி உள்ள விஜய் ,  மீண்டும் விழுந்து எங்களை  கஷ்டப்படுத்தாது, இதே கவனத்துடன் இதே  துடிப்புடன் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வாழ்த்தி கேட்டு கொள்கிறோம்

ஹாப்பி பர்த்டே D(ea)r. விஜய் !!!

Monday, April 1, 2013

வேட்டை நாய்கள்

"டொக் டொக் "

இந்த நேரத்தில் யார் கதவை தட்டுவது. இது கண்டிப்பாக கனவாகத்தான் இருக்கும். அப்படிதான் இருந்தாக வேண்டும் . 

"டொக் டொக் "

இந்த முறை பலமாக கதவு தட்டப்பட்டது. வாரி சுருட்டி கொண்டு எழுந்தேன். நான் இங்கே இருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முனியன் காட்டி கொடுத்து இருப்பானோ ? ச்சே. இருக்காது முனியன் எட்டு தலைமுறைகளாக என் குடுமபத்துக்கு வேலை செய்பவன் . அவன் கல்யாணத்தை கூட நான் தான் நடத்தி வைத்தேன். 

"டொக் டொக் டொக் "

மலை உச்சியில் இருக்கும் ஒற்றை  வீடு இது. இங்க இருந்து தப்பிக்க மலையில் இருந்து குதிப்பதை தவிர வேறு வழியில்லை . இதை எப்படி கண்டுபிடித்து வந்தார்கள். டேனியல் துரை கலககாரர்களை நடத்தும் முறை மிக  கொடூரமானது. அதற்க்கு மலையில் இருந்தே குதித்து விடலாம். அழுகையை அடக்கி கொண்டேன். தப்பித்து ஆக வேண்டும். 

வெளியேற ஒரே வழி அந்த கதவுதான். கதவின் முன்னால் இந்நேரம் பீரங்கிகள் நிறுத்த பட்டிருக்கலாம். சிறு நேரம் சூழ்ந்த நிசப்தம் அவர்கள் திரும்பி சென்றிருக்கலாம் என்று ஆசுவாசுபட்ட நிம்மதியில்  கதவு உடைபடும் சப்தம் இடியென விழுந்தது 

முடிவு நெருங்கி விட்டது.. அறையில் இருந்த harddisk அனைத்தயும் ஜன்னல் வழி வெளி எறிந்தேன். இந்த வார நீயா நானா பார்க்க முடியாது என்ற எண்ணமே தொண்டையை அடைத்தது. கதவு உடைந்து விழுந்த அதே சமயம் iPhoneல் நான் எழுந்திருக்க வைத்திருந்த அலாரம் சாவுமணியென அடித்தது. நல்ல டைமிங் . கடைசியா சிரித்து கொண்டேன். 

கதவின் வழி மெல்லிய உறுமலுடன் உள்ளே நுழைந்த வேட்டை நாய்கள் கண்களில் மின்னிய சிறு குரூரத்தோடு முன்னேறின. இதற்க்கு என்னை சுட்டு கொன்று இருக்கலாம் . இரண்டாம் முறைஅலறியது iPhoneன் அலாரம். இந்த டைமிங் அவ்வளவாய் எனக்கு விருப்பமில்லை . கண்களை மூடி கொண்டேன்

முதுகின் மேல் பலமான் ஒரு உதை விழுந்தது. " ஆபீஸ் போக நினைப்பிருக்கா இல்லையாடா ?" என கேட்டபடியே கெளம்பி வெளியேறி கொண்டிருந்தான் ரூம் மேட் நண்பன். 

வேட்டை நாய்களிடம் இருந்து காப்பாற்றிய அவனை நன்றியோடு ஒரு பார்வை பார்த்தபின்னர் போர்வையை மீண்டும் மூடி படுத்தேன்.

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - பட விமர்சனம்

விஸ்வரூபம் ...  கிருஷ்ணரின் விஸ்வரூபம் பார்க்க கர்ணன் பட்ட கஷ்டத்தை விட அதிக கஷ்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்து , தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையோடு வந்த  விஸ்வரூபம் எதிர்பார்ப்பை தக்க வைக்கிறதா  என்றால் இல்லை என்பதே வருத்தம்  ..

28  அமைப்புகள் எதிர்பார்த்த இசுலாமிய  துவேஷம் இந்த படத்தில் இல்லை.  அவர்கள் சொன்ன விதத்தில் நிச்சயமாய் இல்லை . கமல் படத்தில் வழக்கமாக எதிர்பார்க்கும் அளவு குழப்பம் இல்லை . ஓரளவு நன்றாகவே புரிகிறது. ஒரு முத்த காட்சி கூட இல்லாம உங்களை கூண்டோடு   ஏமாற்ற கூடிய கமல் படம் இது . மற்றபடி இந்த படம் உங்களை சற்றே ஆச்சர்ய படுத்தலாம் . ஒரு 2.5 மணி நேரம் நெளியாமல் அமர வைக்கலாம் . முடிந்து எழும்போது கை தட்ட வைக்கலாம் 


தான் எழுதி பாடிய பாடலோடு , கதக் நடன அசைவுகளோடு,  அரங்கம் அதிரும் கை தட்டல்களோடு அறிமுகம் ஆகிறார் உலகநாயகன் . புரிந்தால் சிரிச்சுக்கோங்க எனும்  கமல் பாணி காமெடி நிறைந்த முதல் 20 நிமிடத்திற்க்கு பிறகு "நான் யாரெனறு தெரிகிறதா" என  கமல் எடுப்பதே ரூபம் ரூபம் விஸ்வரூபம்... 
தலிபான் பயிற்சி , போர் விமான தாக்குதல்  , ஆப்கான லொகேசன் , நியூயார்க் கார் சேசிங் , பாம் ப்ளாஸ்ட்டிங்  என ஹாலிவுட் கிளிஷேக்களை கிட்டதட்ட தத்ரூபமாக ஒரு தமிழ் படத்தில் எடுத்ததே இயக்குனர் கமலின் வெற்றி. கமல் குரலில் சொல்வதென்றால் "ஆங்.தொழில் நுட்ப ரீதியில் இது கண்டிப்பாக தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என தைரியமாக சொல்ல பயப்பட தேவை இல்லை".

கிளைமாக்ஸ்சில்  ஒரு திருப்பம் வைக்க , கடைசியாய் கமலை கட்டி பிடிக்க , ஒரு சில உள்ளாடை காட்சிகளுக்கும் பூஜா குமார். (இந்து மக்கள் கட்சி கவனிக்க கள்ள காதலை நியயாபடுத்துகிற வசனம் பேசிகிறார். ஒரு நாலு கள்ள காதலர்களை பார்சல் அனுப்பி வைக்கவும்) . தமிழ் பட விதிகளின் படி அமெரிக்காவில் லூசாக இருக்கிறார் கதாநாயகி. ஒரு சில எக்ஸ்ப்ரசனை தவிர பெரிதாய் சொல்ல ஒன்றுமில்லை.

சில நேரம் தொய்வு,  மற்ற நேரம் பர பரப்பு என தட தடக்கும் படம் , ஹாலிவுட் தயாரிப்பாளர் வந்து இரண்டாம் பாகம் எடுங்கள் என்று கமலிடம் கேட்டு கொண்டதால் . சற்றே அரைகுறை கிளைமாக்ஸ்சுடன்  சுபமாய் முடிகிறது  விஸ்வரூபம்.,

ஏன் பெண்மைதன்மையுடன் கூடிய கதக் வேஷம் ஆரம்பத்தில் ?(கமலுக்கு நடிக்கக தெரியும்னு  எங்களுக்கு தெரியாதா ? ) 
அமெரிக்காவில் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்க செய்ய எதற்கு FBI இடம் இருந்து தப்பி கார் சேசிங் ?
கேப்டன் படத்தை காப்பி அடித்தது போல எப்படி எல்லா தீவிரவாதிகளும் கடித்து துப்பிய தமிழில் பேசுகிறார்கள் ?
அமெரிக்க முக்கிய நகரில் அணுகுண்டு என தெரிந்தும் கூட ஏதோ தொலைந்து போன செல்போனை தேடுவதை போல தேடும் அமெரிக்கா போலீஸ் என்ன அவ்ளோ அம்மாஞ்சியா ? என சில பல லாஜிக் நெருடல்கள் ( கொஞ்சம் கவனித்து இருக்கலாம் கமல் சார் ) சம்பந்த பட்ட கேள்விகள் இருந்தும் தொக்கி நிக்கும் ஒரே ஒரு முக்கிய கேள்வி

" ஆண்ட்ரியாக்கு  இந்த படத்துல என்ன ரோல் , எதுக்கு இருக்காங்க " ?
(இதே கேள்வியை கௌதமி ஏற்கனவே இடுப்பில் கை வைத்து  முறைத்தபடி கமலிடம்  கேட்டு இருக்கலாம் என அவதானிக்கிறேன் )

 மொத்தத்தில்  தமிழ்  படத்தை ஹாலிவுட் ஆக்கி விட்டரா கமல்  என கேட்டால் அதற்கான கதவுகளை அகலமாக திறந்து வைத்திருக்கிறார் எனலாம் . நடுவில் கொஞ்சம் அலுப்பு  தட்டினாலும் கமர்சியல் பொழுதுபோக்கு சார்ந்த படங்களில் விஸ்வரூபம் விருமாண்டிக்கு கீழ் தசாவதாரம்க்கு மேல் . மற்றபடி தடை விதித்தது எல்லாம் படத்தின் ஒரு காட்சியில்  FBI ஆபிசர் கமலை பார்த்து "WHO ARE YOU MAN ?" என பிரமிப்பது போல தேவையற்ற செயல் என்பது  என் கருத்து 

டிஸ்கி 1: அமெரிக்க திரை அரங்கம் ஒன்றில் பார்த்தது . இடைவேளையே விடல. நல்லவேளை  அலெக்ஸ் பாண்டியனை இங்க பாக்கலேன்னு சந்தோஷ பட்டாலும் கொஞ்சம் நீளம் குறைத்து இருக்கலாம்.
டிஸ்கி 2: ஒரு காட்சியில் கமலின் கைகளை கேமரா focus செய்கையில் அத்தனை சுருக்கம்.. சற்று வருத்தம்தான் . கமலுக்கு வயசாகி போச்சு . ஹாலிவுட் ஹீரோ ஆக தகுதியான வயசாகி போச்சு 

Wednesday, January 23, 2013

ஒரு (ம)ரண சாசனம்

காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும் பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அதில் ஒன்று " விஷம்"

குடிப்பதாக முடிவு செய்தாகிவிட்டது. அரை நொடி அசட்டு துணிச்சல் போதும். கசக்கும் என்ற ஒரே கஷ்டத்தோடு அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரலாம் என்ற அசட்டு நம்பிக்கை. உடலின் எதோ ஒரு மூலையில் வேண்டாம் என கதறி கொண்டிருந்த மனதை அடக்கி குவளையை  கையில் எடுத்தேன் . நடுங்கி கொண்டிருந்த விரல்கள் சற்று விறைப்பானது.

கிராமத்து கூட்டு குடும்பமாக இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பகிர்ந்து கொண்டாலே பாதி துயர் குறைந்திருக்கும். நகரத்து ஒண்டி குடித்தன சமூக அமைப்பு குறித்து மனதுக்குள் படு மோசமாக திட்டி கொண்டேன்.


 "ஏன் இந்த முடிவு?"  என்று யாராவது கேட்டால் பெரும் ஓலம் எடுத்து "விதி" என்று கத்த வேண்டும் போல இருந்தது. கேட்பார் யாருமில்லை.கத்தியும் பிரயோஜனமில்லை. குவளை வாயை நெருங்கி இருந்தது.

கடைசியாய் ஒரு முறை அம்மா கையால் சாப்பிட வேண்டும் போல இருந்தது .திடீரென சம்பந்தமில்லாமல்  பாராட்டோ சால்னா கூட ஞாபகத்தில் வந்து சென்றது . முட்டாள்தனம். இனி தாமதிப்பதில் உபயோகமில்லை. 


"மடக்" .. 


குடித்தே விட்டேன் . பல நூறு
கத்திகளென  தொண்டையை  கிழித்து கொண்டு மிக வேகமாய் இறங்க துவங்கியது திரவம்.  பார்வை சற்று மங்கலாக துவங்க ஏதோதோ ஞாபகங்கள் தோன்றி மறைய , சன்னமாகி விட்ட குரலை தேடி கண்டு பிடித்து சொன்னேன்

" ரசம் ரொம்பவே நல்லா  இருக்கு ப்ரியா. முதல் தடவை மாதிரியே தெரியலே"


" உங்களுக்கு புடிக்கும்னு தெரியும். அதன் லஞ்சுக்கும் சேத்து கட்டி 

இருக்கேன் "

சரி விடு. சத்ரியனின் நாக்குக்கு ஒரு தடவைதான் மரணம்.


நான் ஏற்கனவே சொன்ன மாதிரி காலாவதி ஆகாததும் காலாவதி ஆனாலும்
பெரிய வித்தியாசம் இல்லாத பொருள்கள் உலகில் ரெண்டு. அந்த  மற்றொன்று 
" ரசம்"







Saturday, May 26, 2012

அல்டாப்பின் முதல் அனுபவம்

( தலைப்பை பார்த்து ஏடாகூடமாக எதையும் கற்பனை செய்யாமல் பதிவை படிக்கவும்...)


"ஏன்யா! இந்த ஊர்லே எல்லாரும் "..த்தா ..த்தா"ன்னு சொல்றானுகளே!!. .என்னத்தையா தர சொல்லி கேக்கறானுக?" . சென்னை வந்திறங்கிய முதல் கால்மணி நேரத்தில் அல்டாப்பு என்னை பார்த்து கேட்டது அது. அதன் அர்த்தத்தை சொல்லி அல்டாப்பின் வெள்ளை மனதையும் வெற்றுமூளையையும் களங்கபடுத்த ஆர்வமில்லாததால் " இந்த ஊர்லே யார் என்ன கேட்டாலும் கொடுத்துடாதே..முக்கியமா பணத்தை ".. என கூறி சென்னையை அறிமுகம் செய்தேன்.

சென்னைக்கு என்ன வேலை விசயமாய் வந்துள்ளீர் என யார் கேட்டாலும் " வேலை இருந்தா எதுக்குயா சென்னைக்கு வர்றோம் " என்பதே என் வழக்கமான பதில் 
ஆனால் இந்த தடவை சென்னையில் ஒரு சிறு வேலை நடக்க வேண்டி உள்ளது . அண்ணா சமாதியையும் நடிகர்களின் வீட்டையும்  பார்ப்பதே வாழ்வின் லட்சியமாக கொண்டிருக்கும் லட்சகணக்கான தமிழர்களில் அல்டாப்பும் ஒருத்தன் என்பதால் அவனையும் கூட்டி கொண்டு இந்த சென்னை பயணம்.

போன வாரம் சர்க்கரைவாசன் என்ற ஒரு தயாரிப்பாளர் போனில் கதை சொல்ல வருமாறு அழைத்திருந்தார். நான் படம் எடுக்க ஒரு கதையோடு அலைகிறேன் என கண்டுபிடிததற்க்கே அவருக்கு இந்த வருட சிறந்த கண்டுபுடிப்பிற்க்கான நோபல் பரிசை தாரளமாக வழங்கலாம். இம்முறையாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற சிறு நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் தருவதே சென்னை என் போன்றவர்க்கு அளிக்கும் வரம்..  அதே சமயம் சாபமும் கூட .

வழக்கம் போல சென்னை மதம் கொண்ட காட்டு மிருகத்தை போல திக்கெட்டிலும் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது . " எதுக்கய்யா எல்லாரும் இவ்ளோ அவசரமா எங்கயோ போயிட்டு இருக்காங்க ??" என்ற அல்டாப்பிடம் " அவங்களை நிறுத்தி கேட்டு பாரு. அவங்களுக்கே தெரியாது " என்றேன்.  அலுவலுகத்திற்கு எவ்வளவு அவசரமாய் செல்கிறார்களோ அதே அவசரத்தோடு வீட்டிற்கும் திரும்பும் விந்தையான மக்களை கொண்ட நகரம் சென்னை. காலை மனைவியிடம் தப்பிக்க  ஆபிசுக்கு ஓடி , மாலை மேனேஜரிடம் தப்பிக்க வீட்டுக்கு ஓடி...என்ன ஒரு இனிமையான நகர வாழ்க்கை 

சாலை ஓரம் கூவி கூவி லோன் விற்கும் இளைஞர்கள் , சிக்னலில் கார் கண்ணாடியை துடைக்கும் பிச்சைகாரகள் , அவர்களை கண்டு கொள்ளாமல் சிக்னலை மட்டுமே வெறித்து நோக்கி அமர்ந்திருக்கும் காரோட்டிகள் உள்பட வாழ்நாளில் தான் பார்த்தறியா கதாபாத்திரங்களை கண்டு வியந்தவாறே அல்டாப்பு உடன் வர , ஒரு வழியாய் தயாரிப்பாளர் இல்லம் வந்தடைந்தோம் .

"தரணிஆளும் பவர் ஸ்டார் சக்கரைவாசன் வாழ்க !!" , " அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி பவர் ஸ்டார் வாழ்க!" என்ற பேனர்கள் எங்களை  ஆர்ப்பாட்டாமாய்  வரவேற்றன .தமிழகத்தின் பிரபல நடிகரின் வீட்டை பார்த்த அடங்காத மகிழ்ச்சியில் அல்டாப்பும் ,தலைவிதியின் நிலைமையை நொந்தவாறு நானும் உள்நுழைந்தோம்.

வழுக்கைதலையை தடவியவாறு வந்த ஹீரோ கம் தயாரிப்பாளர் சக்கரைவாசனை கண்டு எனக்கு ஆச்சர்யம் எதுவுமில்லை .. தமிழ்நாட்டில் அரசியலிலும் சினமாவிலும் நுழைய பணத்தை தவிர வேறெந்த தகுதிகளும் தேவை இல்லைதானே ?.. வாயெல்லாம் பல்லை காட்டிக்கொண்டு கைகுலுக்கி அல்டாப்பு தன் பரவசத்தை வெளிபடுத்திகொண்டான். இதயத்தின் ஒரு பக்கம் ஓலமிட்டு அழ , மறுபக்கத்தை கல்லாக்கி கொண்டு பவர்ஸ்டார்க்கு கதையை சொல்லி முடித்தேன்.

"கதை ஓகே.. ஆனா வில்லேஜ் சப்ஜெக்டா இருக்கே. பவர்ஸ்டார்க்கு ஏத்த பவர்  இல்லையேப்பா ??" .. என்ற சக்கரைவாசனிடம் " இப்போ நம்ம ஊர்லே எல்லா வில்லேஜ்ஜுமே பவர் இல்லாமேதான் சார் இருக்கு ". என அப்பாவியாய் பதிலளித்தேன் . " எனக்கு ஏத்த மாதிரி நல்ல ஆக்சன் சுப்ஜக்டா ரெடி பண்ணிட்டு வா அடுத்த மாசம் " என்று பவர்ஸ்டார் எங்களிடம் விடைபெற்று கொண்டார். வெகு ஞாபகமாய் அல்டாப்பு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி பத்திரபடுத்தி கொண்டான்.

உதாசீனங்கள் பழகியவையே என்றாலும் தகுதி இல்லதாதவரிடமிருந்து வந்த புறக்கணிப்பு சற்று வலிக்கவே செய்தது .. தன் பிறவி பயன் பூர்த்தி அடைந்தது போல தனக்கு தானே சிரித்து கொண்டு முகம் முழுக்க பெருமையோடு ஆட்டோகிராப்பை அடிக்கடி பார்த்துகொண்டு குதூகலமாய் வந்த அல்டாப்பை பார்த்து 
என்னுள் தொக்கி நின்ற கேள்வி " இப்போ நான் அழுவதா ? சிரிப்பதா ? " ....